வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, சிறுகச் சிறுகச் சேமித்த பணத்திலும், ஆயுள் முழுமைக்கும் அடைக்க வேண்டிய வீட்டுக் கடனிலும் ஆசையாசையாக வாங்கும் சொந்த வீடுதான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகப்பெரிய கனவாக இருக்கிறது.
ஆனால், நொய்டாவில் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட சொகுசு பிளாட்டில் திடீரென வீட்டின் கூரையின் காரை இடிந்து விழுந்த சம்பவம், கட்டடங்களின் தரம் குறித்த மிகப்பெரிய அச்சத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மேலும் அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தை நூலிழையில் உயிர்தப்பிய செய்தி, அங்கிருந்த குடும்பத்தினரை மட்டுமல்லாது, செய்தியைக் கேட்ட அனைவரது நெஞ்சையும் நடுங்க வைத்துள்ளது.
நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது வீட்டின் வரவேற்பறையில் திடீரென மேலிருந்த கூரையின் பெரும் பகுதி அப்படியே பெயர்ந்து கீழே விழுந்ததாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சில நொடிகள் முன்பாகத்தான் அந்த இடத்தில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாகவும், நல்லவேளையாகக் குழந்தை நகர்ந்த அடுத்த கணமே அந்த கனமான காரை இடிந்து விழுந்ததாகவும் அவர் திக் திக் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
கோடி கோடியாகப் பணத்தை வாங்கிக் கொண்டு வீடைக் கட்டித் தரும் பில்டர்கள், மனித உயிர்களைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் எவ்வளவு தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி என்று அந்தப் பெண் ஆத்திரத்துடனும் கண்ணீருடனும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகின்றன. “கோடி ரூபாய் கொடுத்து வாங்கினாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமைதான் இங்கெல்லாம் இருக்கு போலயே” என்று ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் தங்களது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தரமற்ற கட்டடங்களைக் கட்டிப் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் பில்டர்கள் மீது அரசு அதிகாரிகளும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானத் தரத்தைத் தீர ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
See this Instagram video by @akshitabansal604 https://t.co/wKp69zwOm1
“>
