ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை, ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் காலியானதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரத்பூர் மாவட்டம் பயானா அரசு மருத்துவமனையில் பிறந்து ஒருநாளே ஆன குழந்தை, மூச்சுத் திணறலால் அவதிப்பட்டதையடுத்து, மேல்சிகிச்சைக்காக ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தையை அதன் தந்தையும் மாமாவும் தனியார் ஆம்புலன்ஸில் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்றனர்.
பஸ்ஸி பகுதி அருகே பான்ஸ்கோ என்ற இடத்தில் வந்தபோது, ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரில் உள்ள வாயு தீர்ந்துவிட்டதை குழந்தையின் தந்தை கவனித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குழந்தையையும் குடும்பத்தினரையும் அருகிலுள்ள பஸ்ஸி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸில் எந்த செவிலியரும் இல்லாத நிலையில், ஆக்ஸிஜன் சிலிண்டரை குழந்தையின் தந்தைதான் இயக்கி வந்ததாகவும், ஆக்ஸிஜன் தீர்ந்ததே குழந்தை உயிரிழப்புக்குக் காரணம் என்றும் பஸ்ஸி காவல் ஆய்வாளர் தர்மேந்திர குமார் தெரிவித்தார். மேலும், ஆக்ஸிஜன் தீர்ந்த பின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தங்களை பஸ்ஸி அரசு மருத்துவமனையில் கைவிட்டு சென்றுவிட்டதாக குழந்தையின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவித புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
