வருகிற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பல்வேறு அதிரடித் திட்டங்களை மத்திய நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

குறிப்பாக, பெண்கள் சுயதொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் ‘ஜன் தன்’ வங்கிக் கணக்குகளுடன் இணைந்த பிரத்யேக கிரெடிட் கார்டுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் பெண்கள் எளிதாகக் கடன் வசதி பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். இத்துடன், தொழில் தொடங்கும் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெண்களின் தொழில்முனைவுத் திறனை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த முடியும் என நிதி அமைச்சகம் கருதுகிறது.

பட்ஜெட்டில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்பதால், பெண் தொழில்முனைவோரிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.