தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க, டெல்லியில் இன்று ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியைத் தொடர்வது என்றும், தற்போது நிலவும் அரசியல் சூழலில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையை வலியுறுத்தித் தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் என்றும் மேலிடம் அறிவுறுத்தியதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, திமுக கூட்டணிக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வந்ததாகக் கூறப்படும் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநிலத் தலைமைப் பரிந்துரை செய்துள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“நட்புக்குத் தோள் கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்” எனப் பதிவிட்டிருந்த மாணிக்கம் தாகூர், இன்றைய கூட்டத்தில் தனது நிலைப்பாட்டை விளக்க முயன்ற போதிலும், கட்சி மேலிடம் கூட்டணி நலனே முக்கியம் என்பதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.