தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க, டெல்லியில் இன்று (ஜன. 17) நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பாகச் சில நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிடுவது மற்றும் அறிக்கைகளை வெளியிடுவது குறித்து ராகுல் காந்தி தனது வேதனையைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு முரணானது எனச் சுட்டிக்காட்டினார். “கூட்டணி தொடர்பாக அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது; அதனைத் தமிழக காங்கிரஸ் அப்படியே பின்பற்றும்” என்று கூறிய செல்வப்பெருந்தகை, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறக் கூடாது என்றும் எச்சரித்தார்.
இதன் மூலம், திமுக-வுடனான அதிகாரப் பகிர்வு மற்றும் தவெக-வுடனான கூட்டணி குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் காங்கிரஸ் மேலிடம் விரும்புவது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.
