தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் (வயது 87), சளி மற்றும் லேசான காய்ச்சல் காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (ஜன. 17) அனுமதிக்கப்பட்டார்.

பொங்கல் விழாக் கொண்டாட்டங்கள் மற்றும் திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழா எனத் தொடர் பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு, இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிகிச்சை பெற்று வரும் துரைமுருகனைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

அமைச்சருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.