டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்த சோனியா அந்த வீட்டிலேயே சுமார் 2 கிலோ தங்க நகைகளையும் பணத்தையும் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் மாதம் புகாரளிக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் சோனியாவைத் தேடிச் சென்றனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் தனது வீட்டில் பிட் புல், அமெரிக்கன் புல்லி உள்ளிட்ட 15 அபாயகரமான நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
யாரும் அவ்வளவு எளிதில் வீட்டிற்குள் நுழைய முடியாதபடி பாதுகாப்பை ஏற்படுத்திய அவர், திருடிய நகைகளை பல்வேறு வங்கிகளில் அடமானம் வைத்து 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் ஒரு திட்டத்தை வகுத்து, ஆபத்தான நாய்களைச் சமாளித்து சோனியாவின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அவர் ஒரு போர்வையின் கீழ் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்து கையும் களவுமாகக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டதுடன், அவர் அடமானம் வைத்திருந்த 2 கிலோ தங்கத்தையும் போலீசார் கண்டறிந்தனர். ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய சோனியா, தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
தப்பியோட 15 நாய்களைத் துணையாக வைத்திருந்தும், போலீசாரின் சாதுர்யத்தால் அவர் சிக்கிய விதம் அந்தப் பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
