இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய ஏ அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். வெறும் 6 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டாலும், அவரது இந்த வெறித்தனமான இன்னிங்ஸில் 8 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும். இப்போட்டியில் வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்த வைபவ் சூர்யவன்ஷி, ‘லிஸ்ட் ஏ’ (List A) கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.
இவரின் இந்த அசுரத்தனமான பேட்டிங்கால் இந்திய ஏ அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. முன்னதாக அண்மையில் முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 776 ரன்கள் குவித்து ‘ஆரஞ்சு கேப்’ வென்றதுடன், ஒரே ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையும் படைத்தார். இந்த அசாத்திய திறமையால், தற்போது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய முதன்மை அணியிலும் வைபவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், 15 வயதே ஆகும் வைபவ் சூர்யவன்ஷி இவ்வளவு இளம் வயதில் அதிகப்படியான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவரது எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியலாம் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேரில் கலினன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த சிறுவனின் ஆட்டத்தைக் கண்டு நான் வியக்கிறேன், ஆனால் இவனது காயங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை என்பது அச்சமளிக்கிறது. 15 வயதே ஆகும் ஒரு சிறுவன், இவ்வளவு கனமான பேட்டை இவ்வளவு வேகமாக சுழற்றி விளையாடும்போது அவனது மணிக்கட்டு, முழங்கை மற்றும் சிறிய மூட்டுகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மூட்டு தசைநார்கள் வளரும் பருவத்தில் இருப்பதால், அதிகப்படியான அழுத்தத்தை அவை தாங்காது. சச்சின் டெண்டுல்கர் கூட இந்த வயதில் பேட்டை இவ்வளவு வேகமாக சுழற்றியதில்லை; அவரே முழங்கை காயத்தால் (Tennis Elbow) ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழக்கும் நிலைக்குச் சென்றதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கலினன் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
