மகாராஷ்டிர மாநிலம் நந்த்கான் கிராமத்தில், அங்கன்வாடி ஊழியர் ஒருவர் சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு நடத்தும் அந்த அங்கன்வாடி மையத்திற்குள், அழுதுகொண்டிருக்கும் அந்தச் சிறுமியைப் படுக்கவைத்து, அவளது நெஞ்சில் காலை வைத்தும், காலால் எட்டி உதைத்தும் அந்த ஊழியர் சித்திரவதை செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, நவிமும்பை போலீஸாருக்குக் கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் திரண்டு போராடி வருகின்றனர்.
How cruel do you have to be to kick a helpless little girl in the chest? This Anganwadi worker from Nandgaon, Panvel, deserves the same treatment. pic.twitter.com/MG6Y8t3NNk
— Madhur (@ThePlacardGuy) June 25, 2026
இந்த விபரீதச் சம்பவம் தொடர்பாக நவிமும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அங்கன்வாடி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதுடன், அங்குள்ள மற்ற குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் தனிப்படைகளை நந்த்கான் மையத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்துள்ள குழந்தைகள் நல ஆர்வலர்கள், மாநில அரசு உடனடியாக அனைத்து அங்கன்வாடிகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்றும், குழந்தைகளைப் பராமரிக்கும் ஊழியர்களுக்குக் கடுமையான உளவியல் சோதனைகளை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தனியுரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு, அந்த கொடூர வீடியோவை யாரும் மேலும் பகிர வேண்டாம் என போலீஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
