நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ், சமீபத்திய மேடை ஒன்றில் பாஜக மற்றும் நடிகர் விஜய் குறித்து அதிரடியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைப்பதையும், அதற்கு நடிகர் விஜய் ஒரு கருவியாக செயல்படுவதையும் கடுமையாகச் சாடிய அவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் வரை பாசிச சக்திகளால் இங்கு நுழைய முடியாது என்று கூறினார். மேலும், “நீங்கள் வாழ்க்கையில் ஏதாவது பாவம் செய்ய வேண்டும் என நினைத்தால் மட்டும் பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள்” என மிகவும் காட்டமாகப் பேசியுள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய கருணாஸ், 200 கோடி ரூபாய் சம்பளத்தை இழந்து விஜய் அரசியலுக்கு வருவதாகச் சொல்வது வெறும் நாடகம் என்றும், அவர் 2 லட்சம் கோடி சம்பாதிக்கவே வருவதாகவும் குற்றம் சாட்டினார். பெரிய நடிகர்களுக்கு இல்லாத மக்கள் உணர்வு தனக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில சுயாட்சியை நிலைநாட்டவும் தற்போதைய திமுக அரசுதான் சரியான வழி என்றும், விஜய்யை ஒரு ‘சங்கி’ என்றும் விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
