பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளரான திஷா சலியான், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி மும்பை மலடில் உள்ள கட்டடத்தின் 14-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் தவறி விழுந்து இறந்ததாக மும்பை காவல்துறை தெரிவித்த நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை சதீஷ் சலியான் குற்றம் சாட்டினார்.
மும்பை காவல்துறையின் விசாரணையில் திருப்தி அடையாத திஷாவின் தந்தை, இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார். பல ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) வசம் ஒப்படைத்து பம்பாய் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கில் காவல்துறை ஆரம்பத்தில் இருந்தே அலட்சியமாகச் செயல்பட்டதாக திஷாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 5 ஆண்டுகள் கழித்தே பிரேதப் பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டதாகவும், அவர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்ட நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும், சிவசேனா (UBT) சட்டமன்ற உறுப்பினர் ஆதித்ய தாக்கரேவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சாரங் கோட்வால் மற்றும் ரஞ்சித் சின்ஹா போசலே ஆகியோர் அடங்கிய அமர்வு, முறையான நீதி கிடைப்பதை உறுதி செய்ய இந்த விவகாரத்தைச் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. சிபிஐயின் மூத்த அதிகாரிகள் இந்த விசாரணையைத் தலைமை தாங்கி நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் தெளிவான ஆதாரங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க தகவல்கள் வெளிவந்தால் மட்டுமே யார் மீதும் குற்றம் சுமத்தப்படும் என்றும், விசாரணையின் முடிவில் எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை என்றால் வழக்கை முறைப்படி முடித்து வைக்க நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
