தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவரை 17 வயது சிறுவர்கள் நான்கு பேர் கஞ்சா போதையில் அரிவாளால் கொடூரமாகத் தாக்கி, அதை “ரீல்ஸ்” எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்க வைப்பதாகத் தெரிவித்துள்ளார். புத்தகப் பையைச் சுமந்து கொண்டு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளைஞர்கள், கையில் பயங்கர ஆயுதங்களை ஏந்தித் தடம் புரண்டு நிற்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், போதைப் பழக்கத்தால் சிறுவர்களின் மன ஆரோக்கியம் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்து என்று எச்சரித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சினிமா பாணியில் வீடியோக்களை வெளியிடுவதிலேயே கவனம் செலுத்துவதாகச் சாடிய அவர், திமுக ஆட்சி ரவுடிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். “பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன்” என்ற வன்முறை கலாச்சாரம் தமிழகத்தைச் சீரழித்து வருவதாகவும், விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்டப்பட்டு தமிழகம் மீட்கப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் உறுதியாகக் கூறியுள்ளார்.
