வாழ்க்கையில் ஒரு காலத்தில் உயர்ந்து நின்றவர்கள் திடீரென கீழே விழுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு சோகமான கதைதான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியுடையது. சச்சின் டெண்டுல்கருடன் பள்ளி நாட்களிலேயே நெருங்கிய நண்பராக இருந்த காம்ப்ளி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் சச்சினை விடச் சிறந்தவராகப் பார்க்கப்பட்டார்.

அவர் இந்தியாவுக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, பல சதங்கள் அடித்து நட்சத்திர வீரராக வலம் வந்தார். ஆனால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை சீக்கிரமே முடிவுக்கு வந்தது. ஒரு காலத்தில் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருந்த காம்ப்ளி, தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளார். அவரது ஆண்டு வருமானம் ₹4 லட்சமாகக் குறைந்துவிட்டது.

தற்போது பிசிசிஐ தரும் ₹30,000 மாத ஓய்வூதியத்தை வைத்துத்தான் அவர் தன்னுடைய செலவுகளைச் சமாளித்து வருகிறாராம். உடல்நிலை சரியில்லாமல், நடமாடக் கூட மற்றவர்களின் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள அவரது வீடியோ, ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.