பாமகவில் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் உள்கட்சி மோதல், தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் இரண்டு தரப்பாக பிரிந்து செயல்படுவது நிலைமைக்கு தீவிரத்தை கூட்டியுள்ளது.
நிர்வாகிகள் நியமனம், பொறுப்பு மாற்றங்கள், ஆலோசனைக் கூட்டங்கள் என பல்வேறு முடிவுகளைச் சுற்றி, தந்தை – மகன் இடையே பிளவு அதிகரித்தது. இதன் விளைவாக பிரச்சனை தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் வரையிலும் சென்றுள்ளது. சமீபத்தில் தேர்தல் ஆணையம், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை அங்கீகரித்தது. இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
அன்புமணி தவறான ஆவணங்களை சமர்ப்பித்ததைக் தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்ட நிலையில், அவ்வங்கீகாரம் செல்லாது என ராமதாஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி, தன்னைக் கட்சித் தலைவராக்கிய மறுநாளிலிருந்தே ஜி.கே.மணி சூழ்ச்சி செய்ததாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“ஜிகே மணி திட்டமிட்டு அப்பா–மகன் உறவில் இடைவெளி உண்டாக்கினார். ராமதாஸை சுற்றி துரோகிகள், தீய சக்திகள் உள்ளனர். திமுகக்கு பாமகவை நேரில் எதிர்கொள்ள தைரியம் இல்லை” என அவர் விமர்சித்தார். இதற்கு பதிலளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாமக நான் உருவாக்கிய கட்சி. வேறொருவருக்கு இதில் உரிமை இல்லை. அன்புமணி தனியாக புதிய கட்சி தொடங்கலாம்” என்றார். மேலும் இந்த பரிமாற்றங்களால் பாமகவின் உள்கட்சி பிரச்சனை இன்னும் தீவிரமடைந்துள்ள நிலையில், இது எதிர்வரும் தேர்தல் அரசியல் கணக்குகளில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
