மகாராஷ்டிராவின் லோதிமா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில், கடந்த ஒரு ஆண்டாக அனிஷா திக்கா (27) என்ற பெண் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
கடந்த சனிக்கிழமையன்று திடீரென வானிலை மாறியதால், மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஜனரேட்டரில் டீசல் அளவைச் சரிபார்க்க அனிஷா சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக, அவர் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா (ஓடை) ஓடிக்கொண்டிருந்த ஜனரேட்டரின் விசிறியில் சிக்கியது. இதில் துப்பட்டா கழுத்தை இறுக்கியதோடு, அவர் ஜனரேட்டரில் பலமாக மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரது சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்கள், ரத்த வெள்ளத்தில் இருந்த அனிஷாவை மீட்டு அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இரண்டு நாட்களாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புப் பணியில் இருந்த ஒருவரை ஜனரேட்டரைச் சரிபார்க்கச் சொன்னது நிர்வாகத்தின் அலட்சியமே என அனிஷாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
