மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்த போதிலும், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான தீர்ப்பு அல்ல என்றும், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட ஒரு சதி என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தான் லோக்பவனுக்குச் சென்று பதவி விலகல் கடிதத்தை அளிக்கப்போவதில்லை என்றும், அரசியலமைப்பு விதிகளின்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
சுமார் 100 தொகுதிகளில் மக்களின் வாக்குகள் திருடப்பட்டதாகக் கூறி, இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக மம்தா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் தோற்ற பின்பும் ஒரு முதலமைச்சர் பதவி விலக மறுப்பது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்பதால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அரசியலமைப்பின் 164-வது சட்டப்பிரிவின்படி, பெரும்பான்மையை இழந்த முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.
மே 7-ஆம் தேதி பழைய சட்டமன்றம் தானாகவே கலைக்கப்படும் என்பதால், மம்தா ராஜினாமா செய்யாவிட்டாலும் புதிய முதலமைச்சரை நியமிப்பதில் சட்ட ரீதியாகத் தடைகள் ஏதுமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒருவேளை சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், சட்டப்பிரிவு 356-இன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் ஆளுநர் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது.
