தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகியது பாஜக வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் இன்று (பிப். 9) சென்னை வந்துள்ளார். தியாகராய நகரில் உள்ள ‘கமலாலயம்’ தலைமை அலுவலகத்தில் தங்கியுள்ள அவர், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
குறிப்பாக, அண்ணாமலை தனது பொறுப்பிலிருந்து விலகியதற்கான உண்மையான காரணம் மற்றும் கட்சிக்குள் நிலவும் அதிருப்திகள் குறித்து அவர் கேட்டறிய உள்ளதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலையின் அரசியல் குருவாகக் கருதப்படும் பி.எல். சந்தோஷ், அவரை நேரில் சந்தித்துச் சமாதானப்படுத்தவும், 2026 தேர்தலுக்கான புதிய ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது குறித்தும் முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் திடீர் வருகை தமிழக பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
