பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீரின் மூன்றாவது மகள் மஹ்னூரின் திருமணம், ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் (GHQ) கடந்த 26-ஆம் தேதி மிக ரகசியமாக நடைபெற்று முடிந்தது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பார்வையில் படாமல் இந்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. அசிம் முனீர் தனது தம்பி காசிம் முனீரின் மகனான அப்துல் ரஹ்மானுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்துள்ளார்.

மணமகன் அப்துல் ரஹ்மான் ஏற்கனவே ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றியவர் என்பதும், தற்போது ராணுவ அதிகாரிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் குடிமைப் பணிகளில் உதவி ஆணையராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த உயர்மட்ட திருமண விழாவில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ், துணைப் பிரதமர் இஷாக் தார் மற்றும் ஐ.எஸ்.ஐ (ISI) அமைப்பின் தலைவர் உள்ளிட்ட சுமார் 400 முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அதே சமயத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பாகிஸ்தான் வருகை தந்திருந்ததால் அவர் திருமணத்தில் பங்கேற்றதாக முதலில் செய்திகள் வெளியாகின; இருப்பினும், அவர் அதிகாரப்பூர்வப் பணிகளுக்காகவே வந்திருந்ததாகவும், திருமண விழாவில் பங்கேற்கவில்லை என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக திருமணத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், பாகிஸ்தானின் அதிகார மையங்கள் ஒன்றுகூடிய இந்த நிகழ்வு தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.