2026-ஆம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் நேரடி ராணுவ மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ்’ சிந்தனைக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் காஷ்மீரில் நிலவும் சூழல் காரணமாக 2026-இல் இரு அணுஆயுத நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ‘மிதமான அளவில்’ இருப்பதாகக் கணித்துள்ளது.

இதேபோல், ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தி பாகிஸ்தான் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இது தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்குப் பெரும் சவாலாக அமையும் என்றும் அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.