ஜிமெயில் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, தற்போதுள்ள கூகுள் கணக்கை மாற்றாமல் அதன் மின்னஞ்சல் முகவரியை மட்டும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் உங்கள் பழைய மெயில் ஐடிக்குப் பதிலாக புதிய ஐடியை உருவாக்கிக்கொள்ளலாம். அப்படி மாற்றினாலும், உங்கள் பழைய முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களும் தானாகவே புதிய முகவரியின் இன்பாக்ஸிற்கு வந்துவிடும்.
மேலும், டிரைவ் மற்றும் கூகுள் புகைப்படங்களில் உள்ள உங்களது தரவுகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பயனர்கள் கவலைப்படத் தேவையில்லை.
இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி ஒருமுறை முகவரியை மாற்றிவிட்டால், அடுத்த ஓராண்டுக்கு அதனை மீண்டும் மாற்றவோ அல்லது நீக்கவோ முடியாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் முகவரியை மாற்றினாலும் யூடியூப், கூகுள் டிரைவ் போன்ற பிற சேவைகளை அணுகுவதில் எந்த சிக்கலும் இருக்காது என கூகுள் உறுதி அளித்துள்ளது.
தற்போது இந்த அப்டேட் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
