புணேவில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் மற்றும் இசைக்குழுக்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் வித்யானந்த் பாபத், ஊடகங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை திலக் சாலையில் உள்ள காஷாலே சவுக் பகுதியில் தொலைக்காட்சி ஊடகத்துக்கு அவர் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் அவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
ஊடகத்திடம் பாபத் பேசிக் கொண்டிருந்தபோது, அவரை நெருங்கிய ஒருவர் திடீரென தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு இருந்த சிலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நிலைமை மேலும் பதற்றமானதாக மாறியது. சம்பவ இடத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸார் அங்கு வந்து பாபத்தை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அவரை போலீஸார் அழைத்துச் செல்லும் காட்சிகளையும் ஊடகத்தினர் பதிவு செய்துள்ளனர்.
SHOCKING: Vidyanand Bapat, who recently opposed DJs and high-decibel loudspeakers during Ganeshotsav, was allegedly assaulted at Kashale Chowk on Pune’s Tilak Road while collecting public feedback. Sources said around 4 Ganesh mandal activists were present. Police on the spot. pic.twitter.com/1a27PIrBPg
— Varad Bhatkhande | Journalist (@VaradBhatkhande) September 3, 2026
விநாயகர் சதுர்த்தி விழாக்களில் அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாபத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். விழா ஏற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திலும் அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் சில விநாயகர் மண்டல அமைப்பினருடன் அவருக்கு கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த விவாதம் தொடர்பான காட்சிகளும் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் கவனம் பெற்றிருந்தன.
தனது எதிர்ப்பு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கோ அல்லது எந்த ஒரு மதத்திற்கோ எதிரானது அல்ல என்று பாபத் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அதிக ஒலி எழுப்புவதை மட்டுமே எதிர்ப்பதாக அவர் கூறியுள்ளார். மத நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் அதிக ஒலி எழுப்பும் கருவிகளுக்கு ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஊடகத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தாக்கப்பட்ட சம்பவம் புணேவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
