நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் கோர முகத்தை வெளிப்படுத்தும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சத்யம் பாண்டே என்ற விலாகர், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுமானப் பகுதிக்குள் சென்று அங்குள்ள நிலைமையை பதிவு செய்துள்ளார். அங்கு ஏராளமான கனரக வாகனங்கள் சேறும் சகதியுமாக மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்பட்டன. ஜேசிபி இயந்திரங்கள், சரக்கு லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு, தற்போது மண்ணில் சிக்கியிருப்பது காணொலியில் தெரியவந்துள்ளது.

அந்தப் பகுதியில் புதைந்திருந்த ஒரு லாரிக்குள் சென்ற விலாகர், அங்கிருந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஓட்டுநர் அமரும் இருக்கை, ஸ்டியரிங் உள்ளிட்டவை மண்ணால் மூடப்பட்டிருந்த நிலையில், ஓட்டுநர் பயன்படுத்திய போர்வைகள் மற்றும் தனிப்பட்ட பொருள்களும் அங்கேயே கிடந்தன. லாரியின் உள்ளே மண் மற்றும் சேறு பல அடுக்குகளாக படிந்திருந்தது. இதனால் வெள்ளம் அந்தப் பகுதியை எந்த அளவுக்கு பேரழிவுக்கு உள்ளாக்கியிருக்கிறது என்பதை அந்தக் காட்சிகள் உணர்த்துகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Satyam Pandey (@satyampandeyskn)

லாரிக்குள் இருந்தபோது தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியதாக விலாகர் தெரிவித்துள்ளார். அழுகிய விலங்கு அல்லது உடல் போன்ற வாசனை வருவதாக அவர் கூறியது காணொலியை பார்ப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அந்த துர்நாற்றத்துக்கு மனித உடல்கள்தான் காரணம் என்பதை உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் வெளியாகவில்லை. பேரழிவு ஏற்பட்ட பகுதிக்குள் சென்று காணொலி பதிவு செய்வது ஆபத்தானது என்றும், அதன் பின்னணியை மக்களுக்கு காட்டுவதற்காக தாம் பெரும் ஆபத்தை எதிர்கொண்டு அங்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் லாரியின் பின்புறப் பகுதியில் ஏறி நின்ற விலாகர், வெள்ளநீரின் பேராற்றலை விளக்கும் வகையில் காட்சிகளை பதிவு செய்தார். பல டன் எடையுள்ள கனரக வாகனமே மண்ணுக்குள் புதையும் அளவுக்கு வெள்ளநீர் மற்றும் சேறு பெரும் வேகத்துடன் அடித்துச் சென்றிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார். வெள்ளம் வடிந்த பிறகும் அந்தப் பகுதியில் ஏற்பட்ட அழிவின் தடயங்கள் அப்படியே இருப்பது காணொலியில் தெளிவாகத் தெரிகிறது. நேபாள வெள்ளத்தின் பேரழிவை வெளிப்படுத்தும் இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.