பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற போதிலும், போட்டியின் இறுதியில் மூத்த வீரர்கள் சிலருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிடம் மிகுந்த கோபத்துடன் ஏதோ விவாதிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
போட்டியின் கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில், பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அப்ரிடி அடித்த பந்து சிக்ஸர் எல்லைக் கோட்டுக்கு அருகே நின்றிருந்த குல்தீப் யாதவிடம் சென்றது. பந்தைப் பிடிக்க முயன்ற குல்தீப், எதிர்பாராதவிதமாக அதைக் கோட்டை விட்டார். அந்தப் பந்து அவர் கையில் பட்டு எல்லைக் கோட்டிற்கு வெளியே சிக்ஸராகச் சென்றது.
வெற்றி உறுதியாகிவிட்ட நிலையிலும், பீல்டிங்கில் நடந்த இந்தத் தவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஹர்திக் பாண்டியா, மைதானத்திலேயே குல்தீப்பை நோக்கி ஆவேசமாக ஏதோ கூறினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவும் கடுமையான தொனியில் குல்தீப்பிடம் பேசியது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சமயத்தில் அருகில் இருந்த திலக் வர்மா கவலையுடன் காணப்பட, ரிங்கு சிங் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார்.
இந்தச் சம்பவம் குறித்து இணையத்தில் இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன. “வெற்றி பெற்ற பிறகு இவ்வளவு கடுமை தேவையில்லை” என ஒரு தரப்பினரும், “டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் பீல்டிங் தரம் மிக முக்கியம், அதைக் கேப்டனும் சீனியர் வீரர்களும் கண்டிப்பதில் தவறில்லை” என மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
மேலும் எது எப்படியோ, பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணிக்குள்ளே இருக்கும் இத்தகைய சிறிய மனக்கசப்புகள் அடுத்த ஆட்டத்திற்குள் சரியாகிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Here is video of Hardik Pandya & Surya Kumar Yadav angry on Kuldeep Yadav #INDvsPAK #T20WorldCup pic.twitter.com/BsGCCprKNc
— cricketkayudh (@cricketkayudh) February 15, 2026
