ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்நாட்டு ரசிகர் ஒருவர், தனது கோபத்தை தொலைக்காட்சியின் மீது காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வக்கார் அசாம் என்ற பாகிஸ்தான் ரசிகர், தனது அணியின் தோல்வியால் ஆத்திரமடைந்து, கையில் கிரிக்கெட் மட்டையுடன் தனது அறைக்குள் புகுந்தார். “இந்தியா மீண்டும் பாகிஸ்தானைத் தோற்கடித்துவிட்டது என்ற விரக்தியில் எனது டிவியை உடைத்துவிட்டேன்” என்ற குறிப்புடன் அவர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், அவர் தனது தொலைக்காட்சியை மட்டையால் சரமாரியாகத் தாக்கி நொறுக்குவதுடன், ஆத்திரம் தீராமல் அதனைத் திருப்பிப் போட்டு அதன் திரையையும் அடித்து உடைக்கிறார். இது ஒருபுறமிருக்க, கொழும்பு மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் அணியின் செயல்பாட்டைப் பார்த்து மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் பேசிய பாகிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:
இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்பது என்பது இப்போது ஒரு வாடிக்கையான விஷயமாகிவிட்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் சண்டையிட்டு வெற்றி பெறும் எனச் சிறு நம்பிக்கை இருந்தது. ஆனால், எங்களிடம் பும்ராவிற்குப் பதிலடி கொடுக்க வழியில்லை; ஹர்திக் பாண்டியாவை எதிர்கொள்ளத் துணிவில்லை. இந்தியா எப்போதும் போல மிகச் சிறப்பாக விளையாடியது. இதே நிலை நீடித்தால் எங்களால் ஒருபோதும் இந்தியாவை வீழ்த்த முடியாது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்றார்.
கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இஷான் கிஷனின் அதிரடி அரைசதமும், இந்திய பந்துவீச்சாளர்களின் கூட்டு முயற்சியும் இந்தியாவின் 61 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிக்கு வித்திட்டது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி விகிதம் 8-1 என அதிகரித்துள்ளது.
குரூப்-A பிரிவில் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க அணி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
https://www.facebook.com/share/r/1E3xiiNVdg/
