ஜப்பானின் டோக்கியோவில் நடந்த தனித்தனி குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்ற 28 வயது வீரர்கள் ஷிகெடோஷி கோட்டாரி மற்றும் ஹிரோமாசா உரகாவா, போட்டியின்போது ஏற்பட்ட கடுமையான சப்டியூரல் ஹீமாடோமா (மூளை ரத்தக்கசிவு) காரணமாக சில நாட்களுக்குள் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற்ற 12 சுற்றுப் பட்டப் போட்டியை முடித்த சில நிமிடங்களில் கோட்டாரி மயங்கி விழுந்தார். அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அடுத்த நாள், உரகாவா நாக்-அவுட் தோல்வியடைந்து அதே வகை மூளைக் காயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

“>

 

இந்த சம்பவங்கள் ஜப்பானில் குத்துச்சண்டை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளன. ஜப்பான் குத்துச்சண்டை ஆணையம் (JBC), ஒரே நிகழ்வில் இரண்டு வீரர்கள் மண்டை ஓடு திறக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டது இதுவே முதல் முறை என தெரிவித்துள்ளது.

இதன் பின்னர், அனைத்து ஓரியண்டல் மற்றும் பசிபிக் பட்டப் போட்டிகளும் 12 சுற்றுகளிலிருந்து 10 சுற்றுகளாகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக குத்துச்சண்டை அமைப்புகள் இரு வீரர்களின் மறைவுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.

“>

 

இந்த ஆண்டு உலகளவில் குத்துச்சண்டை வளையத்திற்குள் ஏற்பட்ட காயங்களால் உரகாவாவின் மரணம் மூன்றாவது உயிரிழப்பாகும். கடந்த ஆண்டு, ஐரிஷ் வீரர் ஜான் கூனி போட்டியின் போது ஏற்பட்ட மூளை காயத்தால் உயிரிழந்தார். தற்போது, சண்டை கால அளவைக் குறைத்தல், போட்டிக்குப் பிந்தைய கட்டாய மருத்துவ பரிசோதனைகள், மூளையதிர்ச்சி (Concussion)நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உலகளவில் வலியுறுத்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.