உலக அளவில் மக்கள்தொகை வீழ்ச்சி மற்றும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வது பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், அண்டை நாடான பூட்டான் அரசு தனது நாட்டு மக்களின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அதிரடியான நிதியுதவித் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி, தம்பதியினர் தங்களின் மூன்றாவது மற்றும் அதற்கு அடுத்ததாகப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும், அக்குழந்தைக்கு மூன்று வயது ஆகும் வரை மாதந்தோறும் 10,000 நுல்ட்ரம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000) நிதியுதவியாக வழங்கப்படும் என்று பூட்டான் நாட்டின் அமைச்சரவைச் செயலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் எதிர்காலத் தொழிலாளர் வளம் மற்றும் சமூகப் பொருளாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஊக்கத்தொகைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் 11,000-க்கும் அதிகமாக இருந்த பூட்டானின் ஒட்டுமொத்த ஆண்டுப் பிறப்பு விகிதம், கடந்த 2024-ஆம் ஆண்டில் 8,153 ஆகக் குறைந்துள்ளது பூட்டான் அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பொருளாதார மந்தநிலை காரணமாகப் பூட்டான் இளைஞர்கள் அதிகளவில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதால், நாட்டின் மக்கள்தொகை சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சீர்செய்ய, வெறும் பண உதவி மட்டுமின்றி, வேலை செய்யும் பெற்றோருக்குத் தரமான குழந்தை பராமரிப்பு மையங்கள், வரிச் சலுகைகள் மற்றும் விரிவான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான மக்கள் மேம்பாட்டு உத்தியை பூட்டான் அரசு கையில் எடுத்துள்ளது.