உலகமே வியந்து பார்க்கும் ‘மெட்டா’ போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த எல்வின் டான் என்ற இளைஞர், தனது ஐடி வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு தற்போது சாலையோரம் நூடுல்ஸ் கடை நடத்தி வரும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கணினியின் முன்னால் அமர்ந்து தினமும் ஒரே மாதிரியான வேலை, நிறுவனங்களின் திடீர் ஆட்குறைப்பு பயம் மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தனக்கு மென்பொருள் துறையில் இருந்த ஆர்வம் குறைந்துவிட்டதாக எல்வின் தெரிவித்துள்ளார்.

இதனால் தனக்கு பிடித்தமான உணவுத் துறையில் கால் பதிக்க நினைத்த அவர், சிங்கப்பூரின் கெய்லாங் பகுதியில் ‘உமாமி பாம்’ என்ற பெயரில் உணவு ஸ்டால் ஒன்றை தொடங்கி, அங்குள்ள புகழ்பெற்ற ‘ஹோக்கியன் மீ’ நூடுல்ஸ் வகைகளை விற்று வருகிறார். தற்போது இந்த கடை உள்ளூர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Louisa | Investments ✨ (@louisatay)

 

ஆரம்பத்தில் குளிரூட்டப்பட்ட சொகுசு அறையில் வேலை செய்த தனது மகன், சமையலறையின் வெப்பத்தையும், நீண்ட நேர உழைப்பையும் தாங்க முடியாமல் சில மாதங்களிலேயே மீண்டும் ஐடி வேலைக்கு ஓடிவிடுவான் என்று எல்வினின் பெற்றோர் நினைத்தனர். ஆனால், ஒரு வருடத்தைக் கடந்தும் எல்வின் தனது முடிவில் உறுதியாக நின்று சாதித்துக் காட்டியுள்ளார். மெட்டா நிறுவனத்தில் கிடைத்த சம்பளத்தை விட தற்போது இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவான வருமானமே கிடைத்தாலும், தனது வாழ்க்கையில் முழு நிம்மதி கிடைத்துள்ளதாக எல்வின் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

பட்ஜெட் பற்றாக்குறை காரணமாகப் புதிய ஆட்களை வேலைக்கு வைக்காமல், எல்வினின் காதலியே இவருக்குத் துணையாக நின்று கடையைக் கவனித்து வருகிறார். “வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட, செய்யும் வேலையில் எவ்வளவு நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்பதே முக்கியம்” என எல்வின் கூறும் அட்வைஸ் பல ஐடி இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.