“அன்பை வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு தடையில்லை” என்பதை நிரூபிக்கும் வகையில், புனித ஹஜ் யாத்திரையின் போது இந்தோனேசியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மனைவிக்கு அளித்த நெகிழ்ச்சியான சர்ப்ரைஸ் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஹஜ் யாத்திரைக்குச் சென்ற பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பெண்கள் தங்கும் பிரத்யேக கூடாரத்திற்குள், வெள்ளை நிற பாரம்பரிய உடை மற்றும் தொப்பி அணிந்த அந்த இந்தோனேசிய முதியவர் கையில் ஒரு அழகான சிவப்பு ரோஜா மலருடன் நுழைந்தார். கையில் பூவுடன் ஒரு முதியவர் பெண்கள் கேம்பிற்குள் வருவதைக் கண்ட அங்கிருந்த மற்ற பெண் பயணிகள், முதலில் ஆச்சரியமடைந்தாலும் அடுத்த நொடி என்ன நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து புன்னகைக்கத் தொடங்கினர்.
View this post on Instagram
அந்த முதியவர் நேராகச் சென்று, தரையில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தனது மனைவியின் முன்னால் நின்று, மிகுந்த அன்போடும் மரியாதையோடும் கையில் வைத்திருந்த ரோஜாப்பூவை அவரிடம் நீட்டினார். எதிர்பாராத இந்த திடீர் சர்ப்ரைஸால் அந்தப் பாட்டி வெட்கத்துடன் புன்னகைத்த அழகிய தருணம், மொத்த சோசியல் மீடியாவின் இதயத்தையும் கொள்ளையடித்துள்ளது.
அருகில் இருந்த மற்ற பெண் பயணிகளும் இந்த நெகிழ்ச்சியான காட்சியைக் கண்டு கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “புனிதப் பயணத்தில் பூத்த மிகத் தூய்மையான காதல் இது” என்றும், “இந்த வயதிலும் இளசுகளை மிஞ்சும் அளவுக்கு காதல் காட்டிய இந்த தம்பதிக்கு யாருடைய கண்ணும் பட்டுவிடக் கூடாது” என்றும் நெகிழ்ச்சியோடு கமெண்ட் செய்து லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.
