இந்தியா வர மறுத்த அடம், முஸ்தபிசுர் ரஹ்மான் விவகாரம் எனப் பலத்த சர்ச்சைகளுக்குப் பிறகு, 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேச அணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ-யுடன் ஏற்பட்ட மோதலால் இந்தியாவுக்குப் பயணம் செய்ய வங்கதேசம் மறுத்த நிலையில், இதற்குப் பின்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தூண்டுதல் இருந்ததாகப் பரபரப்புப் புகார் கிளம்பியுள்ளது. “வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் அப்பாவியான தலைவரை, பாகிஸ்தானைச் சேர்ந்த மோசின் நக்வி தான் தவறாக வழிநடத்தி இந்த விபரீத முடிவை எடுக்க வைத்தார்” என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலாளர் சையத் அஷ்ரஃபுல் ஹக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவுடன் விளையாட மறுப்பது வங்கதேச கிரிக்கெட்டை 10 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் என்றும், செப்டம்பர் மாதம் இந்தியா வங்கதேசத்திற்குச் சுற்றுப்பயணம் செய்யவில்லை என்றால் அந்நாட்டு கிரிக்கெட் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஒரு வீரருக்காக ஒட்டுமொத்த உலகக்கோப்பை வாய்ப்பையே வங்கதேசம் பறிகொடுத்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
