டி20 உலகக் கோப்பைத் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியனான இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அதன்படி தொடக்க வீரராகக் களமிறங்கிய பதும் நிசாங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 ரன்கள் குவித்தார். எனினும், மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கத் தவறியதால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது.

ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய பிளெஸ்ஸிங் முசரபானி, ப்ராட் ஏவன்ஸ் மற்றும் க்ரேம் கிரெமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இலங்கை அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் புகுந்தது. ஆரம்பம் முதலே அந்த அணியின் வீரர்கள் நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் விளையாடினர். ஒருகட்டத்தில் ஆட்டம் பரபரப்பான நிலையை எட்டியபோது, அனுபவ வீரர் சிக்கந்தர் ராசா அதிரடியில் மிரட்டினார்.

அவர் வெறும் 26 பந்துகளில் 45 ரன்கள் விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இறுதியில், 19.3 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே, 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ஈட்டியது.

இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது அதிரடியாக விளையாடி வெற்றியை உறுதி செய்த சிக்கந்தர் ராசா பெற்றார். மேலும் இலங்கை கடைசி ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாவே அணி குரூப் பி பிரிவில் முதலிடம் பெற்றுள்ள நிலையில் முதல் முறையாக டி20 வரலாற்றில் ஒரு சிறிய அணி பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி முன்னேறி வந்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவையும்  இந்த அணிதான் வீழ்த்தி டி20 உலக கோப்பையை விட்டு வெளியேற்றியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே நேரத்தில் இலங்கை அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால் இந்த தோல்வி அந்த அணியை பெரிய அளவில் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கதாகும்