மே 7ஆம் தேதி அதிகாலை இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய ஆயுதப்படைகள்  பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளின் முகாம்கள் முக்கியமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அதாவுல்லா தரார், ஸ்கை நியூஸில் வழங்கிய நேரலை பேட்டியில், “பாகிஸ்தானில் எந்த பயங்கரவாத முகாம்களும் இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்தார். ஆனால், நிகழ்ச்சித் தொகுப்பாளரும் பத்திரிகையாளருமான யால்டா ஹக்கீம், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மற்றும் முன்னாள் தலைவர்கள் முன்பு கூறிய பயங்கரவாத ஆதரவுப் பதிவுகளை எடுத்துக் காட்டி, அமைச்சரின் கூற்றை நேரடியாக சவாலிட்டனர். ஹக்கீம், “ஒசாமா பின் லாடனை உங்கள் நாட்டிலேயே அமெரிக்கா சுட்டுக் கொன்றது உலகுக்கே தெரிந்த ஒன்று” என சுட்டிக்காட்டினார்.

 

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இந்தியாவின் தாக்குதலை “போர் நடவடிக்கை” எனக் கண்டித்து, “தகுந்த பதிலடி” கொடுக்கப்படும் என வலியுறுத்தினார். பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்திய ராணுவ வட்டாரங்கள் இந்த தாக்குதல்களில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. மேலும் இதனால் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான பதட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.