பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து கெஞ்சார் ஏரி நோக்கிச் சென்ற பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று, நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தக் கோர விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பேருந்து மிக அதிக வேகத்தில் வரும்போது நிலைதடுமாறி இடமும் வலமுமாக ஊசலாடுவதைக் காண முடிகிறது. பேருந்தை நிறுத்த ஓட்டுநர் முயன்றபோது, அவரது கட்டுப்பாட்டை மீறி வாகனம் சாலையில் பயங்கரமாகக் கவிழ்ந்தது.

விபத்துக்குள்ளான அந்தப் பேருந்து அதன் கொள்ளளவை விட மிக அதிகமான பயணிகளுடன் சென்றது தெரியவந்துள்ளது. பேருந்தின் உட்புறம் மட்டுமின்றி, அதன் மேற்கூரையிலும்  ஏராளமான பயணிகள் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். பேருந்து கவிழ்ந்த அந்த நொடியில், மேற்கூரையில் இருந்த பயணிகள் அனைவரும் காற்றில் தூக்கி வீசப்பட்டனர். கவிழ்ந்த பேருந்து அவர்கள் மீதே ஏறிச் சென்றது காண்போரை உறைய வைத்துள்ளது.

விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் பிற வாகன ஓட்டிகள் உடனடியாக ஓடி வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், விபத்தின் தீவிரத்தைப் பார்க்கும்போது உயிரிழப்புகள் அதிகமாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்வது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அதுவே இந்த விபத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.