பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பயன்படுத்தப்பட்ட ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. (HIV) தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில், டான்சா நகரில் உள்ள THQ அரசு மருத்துவமனையில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மருத்துவப் பணியாளர்கள், ஒரே மருந்து குப்பியில் இருந்து பல குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஊசிகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளனர். இதன் விளைவாகப் பிஞ்சு குழந்தைகள் கொடிய நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இது தொடர்பாக பிபிசி (BBC Eye) நிறுவனம் நடத்திய 32 மணிநேர ரகசியப் புலனாய்வில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. மருத்துவப் பணியாளர்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கையுறைகளை அணியாமல் சிகிச்சை அளித்தது. ஒரே ஊசியைக் குறைந்தது 10 முறைக்கும் மேலாகப் பயன்படுத்தியது. பயன்படுத்தப்பட்ட ஊசிகளை அப்புறப்படுத்தாமல், மீண்டும் பயன்படுத்துவதற்காகச் சேகரித்து வைத்தது. இவை அனைத்தும் வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆதாரங்கள் வெளியான போதிலும், மருத்துவமனை நிர்வாகம் இதனை ஏற்க மறுத்துள்ளது. இது குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் காசிம் புஸ்தார் கூறுகையில், “இந்த வீடியோ உண்மையானது அல்ல. ஒருவேளை நான் பதவியேற்பதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, 2024-ன் பிற்பகுதியில் உள்ளூர் மருத்துவர் ஒருவர் இதனை எச்சரித்ததைத் தொடர்ந்து, 2025 மார்ச் மாதம் அப்போதைய மருத்துவக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இதுபோன்ற மருத்துவ அலட்சியங்கள் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த 2019 ராடோ டெரோ நகரில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இதேபோல் தொற்று பரவியது. கடந்த 2024 கராச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் பழைய ஊசிகளைப் பயன்படுத்தியதால் 84 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தற்போது ஒரே ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
