சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவது பற்றிய தங்கள் முடிவை ஏற்கனவே கூறியுள்ளது. பஞ்சாப் மாநில அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிட்டது. அதேபோல் ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசும் இது பற்றிய முடிவை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாநிலங்களின் 2022 -2023 நிதிநிலை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் பட்சத்தில் அவற்றின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

மேலும் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், இயற்கை பேரிடர் போன்றவற்றிற்கு மாநிலங்கள் ஒதுக்கீடு செய்யும் நிதியானது குறைந்துள்ளது. கடன்களுக்கான வட்டி நிர்வாக பணிகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான பட்ஜெட்டின் போது நிதி ஒதுக்கீடு செய்வது மாநிலங்களின் 2021- 2022 நிதிநிலை குறித்த அறிக்கையுடன்  ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. மேலும் தற்போதைய செலவுகளை எதிர்காலத்திற்கு தள்ளிப் போடுவது வரும் காலங்களில் மாநிலங்களின் வருவாய் இல்லாத ஓய்வூதிய செலவின பொறுப்புகளை அதிகரிக்க செய்யும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.