ஆதார் அட்டைதாரர்கள் தங்களின் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை ‘myAadhaar’ இணையதளம் வழியாக இலவசமாக ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை, மேலும் ஒரு முழு ஆண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் மத்தியில் இதற்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த இலவச சேவை வரும் ஜூன் 14, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எந்தவித கட்டணமும் இன்றி தங்களின் விவரங்களை ஆன்லைனில் எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
இந்த ஆன்லைன் போர்ட்டல் மூலம் புதுப்பிப்பவர்களுக்கு மட்டுமே இலவசச் சலுகை பொருந்தும் என்பதால், பொதுமக்கள் இந்த கூடுதல் கால அவகாசத்தைப் பயன்படுத்தி தங்களின் ஆவணங்களை விரைவாகப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அறிவிப்புடன் சேர்த்து, மொபைல் செயலிகளிலும் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருந்த பழைய ‘mAadhaar’ செயலி விரைவில் முழுமையாக நிறுத்தப்பட உள்ளதால், மிகவும் எளிமையான மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் கொண்ட புதிய ‘Aadhaar’ செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த புதிய செயலியில் பாதுகாப்பான க்யூஆர் குறியீடு மூலம் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதியும், மேம்படுத்தப்பட்ட தனியுரிமை கட்டுப்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களுக்குள் 2.1 கோடிக்கும் அதிகமான மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய செயலி, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டு தளங்களிலும் இலவசமாகக் கிடைக்கிறது.
