பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலங்களை முறைக்கேடாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக ஆளும் தவெக அரசு மீது திமுக அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாகக் கூறி, திமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

​இதுதொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுகவின் பரந்தாமன், தவெக அரசை மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், “பழனி கோவில் நில விவகாரத்தில் தவெக அரசு பழனிக்கே மொட்டை அடித்துள்ளது. இந்த நில முறைகேடு பத்திரப்பதிவு நடந்த சமயத்தில், பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் அனைவரும் திடீரென விடுமுறையில் சென்றுள்ளனர். இதுவே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

​மேலும், இந்த முறைகேடு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “பழனி அலுவலக அதிகாரிகள் விடுமுறையில் சென்றால், வழக்கமாக அருகில் இருக்கும் மற்ற அலுவலக அதிகாரிகளைத்தான் தற்காலிகப் பணிக்கு அழைக்க வேண்டும். ஆனால், அருகில் இருப்பவர்களை அழைக்காமல், திட்டமிட்டு கொடைக்கானல் சார் பதிவாளரை வரவழைத்து இந்தப் பத்திரப்பதிவை அவசர அவசரமாக நடத்தியுள்ளனர்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

​பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் தவெக அரசுக்கும், பத்திரப்பதிவுத் துறைக்கும் இடையே கூட்டுச் சதி இருப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ள இந்த விவகாரம், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.