சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில், 11 வயது பள்ளி மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக ஆசிரியர் ஒருவர் வகுப்பறையை விட்டு வெளியே நிற்க வைத்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பள்ளியில் மதிய உணவு இடைவேளை முடிந்த பிறகு, வகுப்பறையில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, அந்தச் சிறுமியை வகுப்பறைக்கு வெளியே போய் நிற்குமாறு அந்த ஆசிரியர் மிகக் கொடூரமாக உத்தரவிட்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அந்த 11 வயது மாணவி, பள்ளி முடியும் வரை பல மணி நேரம் வகுப்பறைக்கு வெளியே அழுதுகொண்டே நின்றுள்ளார்.
பின்னர் பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்ற அந்தச் சிறுமி, தனக்கு நேர்ந்த இந்த அவலத்தை நினைத்துத் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள், அந்த ஆசிரியரின் மனிதாபிமானமற்ற இந்தச் செயலுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளனர். இக்காலத்திலும் மாதவிடாய் போன்ற இயற்கை நிகழ்வைக் காரணம் காட்டி, பள்ளிச் சிறுமிக்கு இப்படியொரு மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
