சிகாரில் உள்ள டாண்டா நகரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பிராச்சி குமாவத், நேற்று தனது பள்ளியில் மதிய உணவுக்கு அமர்ந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். 4-ஆம் வகுப்பு மாணவியான சிறுமி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவருக்கு முதற்கட்ட உதவிகளை செய்து, அருகிலுள்ள சமூக சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பணியாற்றும் டாக்டர் சுபாஷ் வர்மா தெரிவித்ததாவது, “பிராச்சிக்கு மூச்சுத் திணறல், இரத்த அழுத்தக் குறைபாடு, இதயத் துடிப்பின்மை போன்ற மாரடைப்பு அறிகுறிகள் இருந்தன.

உடனடியாக CPR, ஆக்ஸிஜன், மருந்துகள், ஊசி, சொட்டு உள்ளிட்ட அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால் நிலைமை சீராகவில்லை. உடனடியாக சிகாரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பியோம்,” என கூறினார்.

பிராச்சிக்கு கடந்த சில நாட்களாக சளி இருந்ததால் பள்ளிக்கு வரவில்லை என்றும், சம்பவத்தன்று காலை பிரார்த்தனை மற்றும் வகுப்புகளில் கலந்துகொண்டார் என்றும் பள்ளியின் முதல்வர் நந்த் கிஷோர் திவாரி கூறியுள்ளார்.  மதிய உணவு நேரத்தில் டிபன் பெட்டியை திறந்தவுடன் மயங்கி விழுந்ததாகவும், அந்த வேலையில் மாணவி சந்தோசமாக இருந்தது பள்ளி காணொளிகளிலும் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையிலிருந்து சிறுமியின் உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர், அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பாமல், நேரடியாக இறுதிச்சடங்குகளுக்காக வீட்டிற்கு கொண்டு சென்றனர். அவர்களின் தகவலின்படி, பிராச்சிக்கு எந்தவிதமான உடல் நோய்களும் அல்லது தீவிர அறிகுறிகளும் இல்லை. அவருடைய திடீர் மரணம் குடும்பத்தினரையும் பள்ளியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம், குழந்தைகளிடையே திடீரென ஏற்படும் மாரடைப்புகள் குறித்து சுகாதார துறையில் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் உடனடி சிகிச்சை அளித்தும், சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியாதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.