குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் ஜூலை 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் சோலங்கி என்ற நபர், தனது ஏழு வயது மகள் பூமிகாவை, தனது மனைவியின் கண்முன்னே கால்வாயில் வீசி கொலை செய்தார். காரணம் என்னவென்றால், அவருக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பம் தான். இந்த தம்பதியருக்கு ஏற்கனவே மூன்று வயதுடைய மற்றொரு பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலை சம்பவம், நர்மதா கால்வாயில் இருந்து பூமிகாவின் சடலம் மீட்கப்பட்ட பிறகு வெளிச்சத்திற்கு வந்தது. ஆரம்பத்தில், விஜய் சோலங்கி தனது மனைவி அஞ்சனாவிடம் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியிருந்தார். மேலும், முதலில் போலீசாரிடம் “மீன் பிடிக்கச் செல்லும்போது குழந்தை தவறி விழுந்துவிட்டாள்” என அஞ்சனா பொய்யான தகவல் அளித்தார். ஆனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அஞ்சனா தனது சகோதரர்களிடம் உண்மையை வெளிப்படுத்தினார்.

பின்னர், சோலங்கி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரின் தகவலின்படி, சோலங்கி தனது மனைவி மற்றும் மகளுடன் கோவிலுக்குச் சென்றபோது, திரும்பும் வழியில் வாகாவத் பாலம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, “கால் பிடிப்பு வந்தது” என்று பொய்யாக நடித்து, தனது மகளை நேரடியாக கால்வாயில் வீசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கேடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் காதியா, தம்பதியரின் ஆரம்ப விளக்கங்கள் நம்பத்தகுந்தவையாக இல்லை என்பதால், இது ஒரு திட்டமிட்ட கொலை என சந்தேகப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக இந்திய புதிய குற்றச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.