தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட சிறு மோதல், இன்று ஒரு 17 வயது சிறுவனின் உயிரைப் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று அரிவாளுடன் பாய்ந்தது. மற்றவர்கள் தப்பியோடிய நிலையில், நிலைதடுமாறி கீழே விழுந்த மனோஜை அந்த கும்பல் ஈவுஇரக்கமில்லாமல் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியது. ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த அந்தச் சிறுவனின் மரணம், அந்தப் பகுதியையே போர்க்களமாக மாற்றியுள்ளது.

​குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் குதித்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மனோஜின் நண்பருக்கும் ஹரீஷ் என்பவருக்கும் பள்ளிப் பருவத்தில் இருந்த முன்விரோதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. தப்பியோடிய 4 சிறுவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர வலைவீசி வரும் நிலையில், ஒரு சின்ன தகராறு கொலையில் முடிந்திருப்பது கோவில்பட்டியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.