நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாநில பொருளாளர் பிரகாஷ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், சிவசண்முகம், சீதா போன்றோர்  முன்னிலை வகித்துள்ளனர். அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார், இணை செயலாளர் மகேந்திரன் போன்றோர்  கலந்துகொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

அதாவது மத்திய அரசுக்கு வழங்கும் பொருட்கள், மாநில அரசு வழங்கும் பொருட்கள் என இரண்டு ரசிதுகள் போடப்பட வேண்டும் என்ற உத்தரவினால் பொருட்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால் தமிழக அரசு ஒரே ரசிதாக போடும் விதமாக மாற்றம் செய்ய வேண்டும்.

அதேபோல் தற்போது வழங்கப்பட்டுள்ள மின்னணு கருவிகள் 2ஜி, 3ஜி இணையத்தில் வசதியை கொண்டிருப்பதால் பதிவு செய்து பொருட்களை வழங்குவதற்கு தாமதம் ஏற்படுகிறது. அதன் காரணமாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 4ஜி தகவல் தொழில்நுட்ப வசதி கொண்ட கருவிகள் மற்றும் அதற்கு உள்ள சிம் கார்டுகளை வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.