பதற்றம் நிறைந்துள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துப் பாதை அருகே, அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ‘அப்பாச்சி’ ரக ஹெலிகாப்டர் ஒன்று திங்கள்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு வீரர்கள் அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஜலசந்தி பகுதியில் ஈரான் விதித்துள்ள கடல்வழி முற்றுகையை உடைக்கும் நோக்கில், அமெரிக்க மத்திய கட்டளையகம் போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது.
வழக்கமாகப் பாதுகாப்புப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், சமீபகாலமாக ஈரானின் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி, அமெரிக்காவின் ஆக்ரோஷமான ராணுவ பலத்தைக் காட்டும் நோக்கில் இயக்கப்பட்டு வந்ததாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
❗️ US Apache helicopter GOES DOWN near Strait of Hormuz — UNCLEAR whether it was SHOT DOWN or experienced MECHANICAL FAILURE — NYT pic.twitter.com/eE4ZNWfojl
— RT (@RT_com) June 9, 2026
கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பகைமை தொடங்கியதில் இருந்து, அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்று வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இதே காலகட்டத்தில் அமெரிக்காவின் 30 ‘எம்.க்யூ-9 ரீப்பர்’ (MQ-9 Reaper) ரக ட்ரோன்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஏற்கனவே உரிமை கோரியுள்ளது. இந்த நிலையில், தற்போதைய அப்பாச்சி ஹெலிகாப்டர் விபத்தானது ஈரானிய ராணுவத்தின் தாக்குதலால் நிகழ்ந்ததா, அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து இன்னும் தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகமோ அல்லது அமெரிக்க மத்திய கட்டளையகமோ (CENTCOM) அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் இதுவரை வெளியிடாத நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த விரிவான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
