பிரிட்டனைச் சேர்ந்த 79 வயதான பெரும் கோடீஸ்வரர் சர் பெஞ்சமின் ஸ்லேட் வயது முதிர்ந்த இந்தத் தருணத்தில் தனக்கொரு இளம் மனைவியைத் தேடி வருகிறார். சோமர்செட் பகுதியில் உள்ள 50 அறைகளைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘மான்செல் ஹவுஸ்’ என்ற பிரம்மாண்ட அரண்மனைக்கு அதிபரான இவருக்கு, தனது கோடிக்கணக்கான சொத்துக்களையும் இந்த சாம்ராஜ்யத்தையும் தனக்குப் பின் யார் வழிநடத்துவது என்ற கவலை எழுந்துள்ளது.
மேலும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு இந்த சொகுசு அரண்மனையில் வாழும் பாக்கியம், தாராளமான பாக்கெட் மணி மற்றும் சொகுசு கார்களுடன் கூடிய விஐபி வாழ்க்கை முறை ஆகியவை வழங்கப்படும் என்று அவர் அள்ளி வீசியுள்ளார். இருப்பினும், இந்த ஆடம்பர வாழ்க்கையைப் பெறுவதற்கு அவர் ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளார்.
அதாவது, மணமகளாக வரும் பெண் அவரது குடும்பப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் ஒரு வாரிசைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். தனது வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்காக அவர் மேட்ரிமோனியல் தளங்கள், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி வரை விளம்பரம் செய்துள்ளார்.
இந்நிலையில் பல இளம்பெண்கள் இவரைத் திருமணம் செய்ய ஆர்வம் காட்டி வரும் வேளையில், பணத்திற்காக வராமல் உண்மையான பாசத்துடன் வரும் பெண்ணையே தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விசித்திரமான செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
