திருமண உறவில் இருக்கும் ஒருவர், தனது துணைக்குத் தெரியாமல் அல்லது துணையைப் பிரிந்து வேறொருவருடன் ‘லிவ்-இன்’ (Live-in relationship) முறையில் வாழ்வது குற்றமல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவர் மற்றொரு நபருடன் சேர்ந்து வாழ்வது சமூக ரீதியாக தவறாகப் பார்க்கப்பட்டாலும், அது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் ஆகாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பர விருப்பத்துடன் இணைந்து வாழ்வது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம் என்றும், இதில் சட்டம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக, தங்களுக்குப் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடிய ஒரு ஜோடியின் மனுவை விசாரித்தபோது, அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணமானவர்களாக இல்லாவிட்டாலும், ஒன்றாக வாழ்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது போன்ற உறவுகள் தார்மீக ரீதியாக விவாதிக்கப்படலாம், ஆனால் அவற்றைச் சட்டத்தின் முன் குற்றமாக நிறுத்த முடியாது என்பதே இந்தத் தீர்ப்பின் சாராம்சம்.