தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலி கான் அதிரடியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விஜய்யை கூப்பிட்டு உடனே முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வையுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், தேர்தல் முடிவுகள் வந்து ஐந்து நாட்களாகியும் இன்னும் புதிய அரசு அமையாதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நாட்டில் எந்த வேலையும் நடக்கவில்லை என்றும், நிச்சயதார்த்தம் முடிந்து ஒன்றரை வருடம் கழித்து கல்யாணம் செய்வது போல் இந்த தாமதம் நீடிப்பதாகவும் அவர் கிண்டலடித்துள்ளார். மேலும் ஆளுநர் பதவி குறித்துப் பேசிய அவர், ஆட்டுக்கு தாடியும் நாட்டிற்கு ஆளுநரும் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முடிந்து இவ்வளவு நாட்களாகியும் இன்னும் இழுபறி நீடிப்பதை பரோட்டா சூரி காமெடியுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

“கோட்டை அழிக்க வைக்காதீங்க, மறுபடி தேர்தல் வைத்தால் எல்லாம் டப்பா டான்ஸ் ஆகிடும்” என்று தனது பாணியில் எச்சரித்துள்ள மன்சூர் அலி கான், இனிமேல் உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இன்று நடிகர் விஜய் முதல்வராக பதவியேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.