இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையினருக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், பருத்தி இறக்குமதிக்கான அனைத்து சுங்க வரிகளையும் முழுமையாக ரத்து செய்யும் மத்திய அரசின் தற்காலிக வரிவிலக்கு ஜூன் 1-ஆம் தேதியான இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. ஜவுளித் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யவும், எகிறி வரும் உற்பத்திச் செலவைக் குறைக்கவும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த அதிரடி நடைமுறை, வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு சுமார் 11 விழுக்காடு சுங்க வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளில் இருந்தும் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை ஏற்ற இறக்கங்களால் தவித்து வந்த திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதி ஜவுளி ஆலைகளுக்கும், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கும் இந்தத் தற்காலிக வரிவிலக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளதோடு, இந்திய ஆடை ஏற்றுமதிச் சந்தையை சர்வதேச அளவில் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
