தமிழ்நாட்டில் சாலை விதிகளைப் பின்பற்றுவதில் வாகன ஓட்டிகள் காட்டும் அலட்சியம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழக ஓட்டுநர்களின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் இருக்கும் வரை சாலை விதிகளை மதிக்காத ஓட்டுநர்கள் கூட, கேரளா எல்லைக்குள் நுழைந்ததுமே உடனடியாக சீட் பெல்ட் அணிந்து, வண்டியின் வேகத்தையும் சட்டென்று குறைத்துக் கொள்கிறார்கள் என்று ஓப்பனாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றாத காரணத்தினால் மட்டுமே ஒவ்வொரு வருடமும் சுமார் 18,000 பேர் தங்களின் இன்னுயிரை இழக்க நேரிடுகிறது என்ற அதிர்ச்சிகரமான புள்ளிவிவரத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த அவல நிலையை மாற்றி, விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து, சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை ஒட்டுமொத்தமாக ‘பூஜ்யம்’ (0) ஆக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் முதன்மையான இலக்கு என்று அமைச்சர் உறுதிபடக் கூறியுள்ளார்.
