தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுபா என்பவர், தனது கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால், ஆன்லைன் மூலமாக பரிகாரம் செய்யும் ஜோதிடர் ஒருவரிடம் நம்பிக்கை வைத்து தொடர்பு கொண்டார். அவருக்கு வந்த வாட்ஸ்அப் விளம்பரத்தின் மூலம் சுபா, ஜோதிடர் விஷ்ணுராஜனை தொடர்பு கொண்டு, கணவருக்கு பரிகாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கு விஷ்ணுராஜன், “உங்கள் கணவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது, அதை நீக்க பரிகாரம் செய்ய வேண்டும்” எனக் கூறி, சுபாவிடம் ரூ.8 லட்சம் பணம் பெற்றுள்ளார். பரிகாரம் செய்தால் கணவர் குணமாகிவிடுவார் எனக் கூறிய விஷ்ணுராஜனின் வார்த்தைகளை நம்பிய சுபா, முழுப் பணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தினார்.

சில நாட்கள் கடந்தபின்னர், தனது கணவரின் உடல் நலம் மேம்படவில்லை என்பதையும், சம்பவம் முற்றிலும் போலி என உணர்ந்த சுபா, தருமபுரி சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் உத்தரவின் பேரில், சிறப்பு பொலிசார் விஷ்ணுராஜன் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து, பலரிடமிருந்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. காவல் துறையினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.