இந்திய இரயில்வேயில் பயணம் செய்யும் போது நடுப்படுக்கையை பயன்படுத்துவது தொடர்பாகப் பயணிகள் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுவதுண்டு. இதனைத் தவிர்க்க இரயில்வே வாரியம் தெளிவான கால வரம்பை நிர்ணயித்துள்ளது. இந்த விதிமுறையின்படி, நடுப்படுக்கை கொண்ட பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அதைப் படுக்கையாகப் பயன்படுத்த முடியும்.
மேலும் மற்ற நேரங்களில் சக பயணிகளின் வசதிக்காக அந்தப் படுக்கையை மடித்து வைத்துவிட்டு, கீழ் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். இந்த விதிகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்து, பயணம் முழுவதும் சுமுகமான சூழலை உறுதி செய்ய முடியும் என்று தெற்கு இரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த உறங்கும் நேரக் கட்டுப்பாட்டில் இருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்புத் தேவையுடைய பயணிகள், கூடுதல் நேரம் உறங்க வேண்டியிருந்தால் சக பயணிகளின் சம்மதத்தோடோ அல்லது பயணச்சீட்டு பரிசோதகரின் அனுமதியோடோ தங்கள் படுக்கையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதே சமயம், மேல்படுக்கையில் இருப்பவர்களுக்கு இத்தகைய நேரக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. நடுப்படுக்கையில் பயணம் செய்பவர்கள் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவித்தால் அல்லது விதியை மீறினால், அது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். இந்த எளிய விதிகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது அனைத்துத் தரப்புப் பயணிகளுக்கும் ஒரு இனிமையான பயண அனுபவத்தை வழங்கும்.
