கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்தை கையாள்வதில் எந்தவொரு நாடும் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது என்றும், பயங்கரவாதத்திற்கு மதம் அல்லது நாடு கிடையாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்திற்கு எதிரானது எனக் குறிப்பிட்ட அவர், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உலக நாடுகள் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது என வலியுறுத்தினார். பயங்கரவாதிகள் எங்கு மறைந்திருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிக்கும் வலிமை இந்தியாவிற்கு உண்டு என்பதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரு சாட்சி என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

அதே வேளையில், மகாத்மா காந்தியின் போதனைகளை நினைவு கூர்ந்த அவர், மோதல்களைத் தீர்க்கப் போரை விட பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரமே சிறந்த வழி என்று குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் உலகம் பிளவுபட்டுள்ள நிலையில், அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நடத்தப்படும் ஒரு முறையான உலக ஒழுங்கு அவசியம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.